×

காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடியை மூடுங்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: காற்று மாசு அதிகரிப்பை கருத்தில் கொண்டு, டெல்லி எல்லைகளில் உள்ள 9 சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக மூடுவது அல்லது இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டுமென டெல்லி மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி என்சிஆர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் வகுப்பு எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பழைய வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குருகிராம் எல்லை உட்பட டெல்லியின் எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளால் தினந்தோறும் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் இதுவும் காற்று மாசுவிற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி கூறியதாவது:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஆண்டுதோறும் ஏற்படும் வழக்கமான பிரச்னையாகி விட்டது. சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் இல்லை என்ற மாநகராட்சியின் வாதத்தை ஏற்க முடியாது. எனவே, வாகன நெரிசலை குறைக்கும் வகையிலும் காற்று மாசை கருத்தில் கொண்டும் டெல்லியின் 9 எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக மூடவோ அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றவோ பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் டெல்லி மாநகராட்சி பதிலளிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த விஷயத்தில் டெல்லி மாநகராட்சி ஒருவாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். ஜனவரி வரை சுங்கச்சாவடிகள் இருக்காது என்று மாநகராட்சி அதிகாரிகளால் ஏன் சொல்ல முடியவில்லை? ஏனென்றால் உங்களுக்கு பணம் வேண்டும். அதற்காக நாளைக்கு கன்னாட்பிளேஸ் பகுதியில் கூட சுங்கச்சாவடி அமைப்பீர்கள். சுங்கச்சாவடிகள் பணத்தை மட்டுமல்ல வழக்குகளையும் கொண்டு வருகின்றன. எனவே ஜனவரி 31 வரை சுங்கச்சாவடிகள் இருக்காது என் உறுதியான திட்டத்தை உருவாக்குங்கள். இவ்வாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Supreme Court ,Delhi ,New Delhi ,Delhi Municipal Corporation ,Delhi NCR ,
× RELATED வா வாத்தியார் திரைப்படம் மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!