பணி மானூர், டிச.18: மானூர் அருகே உக்கிரன்கோட்டையில் சாலை அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மானூர் அருகே உக்கிரன்கோட்டை பஞ்சாயத்து 1வது வார்டு பெத்தேல் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை அமைக்க வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெத்தேல் நகரில் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. ஜல்லி கற்கள் விரிக்கப்பட்ட நிலையில் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. 6 மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்கப்படாததால் தெருவில் செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்லும் போது தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். எனவே பெத்தேல் நகரில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
