×

தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு

ஊட்டி, டிச.17: ஊட்டியில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்தது. கிலோ ஒன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் சென்னை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டக்காய், வெங்காயம் ஆகியவை நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் பிறப் பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் சமவெளிப் பகுதிகளில் மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஊட்டிக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், கடந்த மாதம் துவக்கத்தில் தக்காளி விலை உயர்ந்தது. கிலோ ஒன்று ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர், மழை குறைந்த நிலையில், படிப்படியாக தக்காளி விலை குறைந்தது. கடந்த வாரம் வரை கிலோ ஒன்று ரூ.35க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில், மீண்டும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் தக்காளி கிலோ ஒன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு வரும் நிலையில், தக்காளி விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் தக்காளி விலை உயர்ந்து வருவதால், பெண்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர். மேலும், தக்காளி விலையை தொடர்ந்து தற்போது சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் விலையும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

Tags : Ooty ,Nilgiris district ,
× RELATED நீலகிரியில் காலநிலையில் திடீர்...