- தலைமை செயற்குழு
- பிரதம செயலாளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- அமைச்சர்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நில வகை மாற்றம் செய்ய தலைமை செயலாளர் தலைமையில் உயர் மட்டக்குழு அமைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் உறுதியளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முதல்வரிடம் மனு அளிக்கும் இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை அண்ணாசாலை அருகே உள்ள சிவானந்தா சாலையில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, சென்னை மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன், ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் எல்.சுந்தரராஜன், கே.வனஜாகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து, மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் அண்ணாஅறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கைகளை முழுமையாக கேட்ட முதல்வர் அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாடு முழுவதும் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்திட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் நாங்கள் தெரிவித்த பல்வேறு பிரச்னைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.
