பெரம்பலூர்,டிச.16: நடக்கவே முடியாதபடி சேரும்சகதியுமாக குட்டைபோல் காணப்படும் சாலையை சீரமைத்து தர வேண்டி தேனூர்கிராமப் பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (15ம்தேதி) திங்கட்கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தேனூர் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் மிகவும் மோசமான பாதை உள்ளது. மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் வெளியேற வடிகால் வசதி இல்லாத அந்தப் பாதையை பயன்படுத்தி நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்தப் பாதையை சரி செய்து தரக் கோரி கோரிக்கை வைத்து மூன்று வருடம் ஆகியும் இதுவரை சரி செய்து தரப் படவில்லை.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தப் பாதையில் பெருமளவு தண்ணீர் குட்டைபோல் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மிக அவசரமாக இந்த பாதையை சரி செய்து தர வேண்டும் என அந்த கோரிக்கை முடிவில் தெரிவித்துள்ளனர்.
