×

வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625 காசாக நிர்ணயம்: கடைகளில் ரூ.8க்கு விற்பனை

 

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 625 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களில் முட்டை விலையில் 15 காசுகள் அதிகரித்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில், முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ.116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.7.50 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : Namakkal ,National Egg ,Coordination ,Committee ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்