×

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: வரும் 23ம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் ஓபிஎஸ்

சென்னை: வரும் 23ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர் உரிமை உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் பாஜக கூட்டணியில் இணைந்து 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியை தழுவினார். அதனை தொடர்ந்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்தது. தமிழகத்தில் அந்த கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என பாஜக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

மேலும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அது எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையாததால், கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான், தன்னுடைய அரசியல் வாழ்வின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கடந்த 15ம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்தச் சூழலில், சமீபத்தில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, டிசம்பர் 15ம் தேதி நடைபெற இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 23ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Tags : Panruti Ramachandran ,OPS ,Chennai ,Paneer Selvam ,O. ,Paneer ,Selvam ,Atymuga Volunteer Rights Rescue Group ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...