×

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு: துணை ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதலின் 24ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

இதில், 6 டெல்லி போலீசார், 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், தோட்டப் பணியாளர், தொலைக்காட்சி செய்தியாளரும் உயிரிழந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதலின் 24ம் ஆண்டு நினைவு தினமான நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பலர் பங்கேற்று, நாடாளுமன்ற தாக்குதலை முறியடித்ததில் வீரமரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி தனது சமூக ஊடக பதிவில், ‘‘நாடாளுமன்றத்தின் மீதான கொடூர தாக்குதலின் போது இன்னுயிரை ஈந்தவர்களை நமது தேசம் நினைவுகூர்கிறது. கடுமையான ஆபத்தை எதிர்கொண்டபோதும், அவர்களின் தைரியம், விழிப்புணர்வு மற்றும் அசைக்க முடியாத கடமையுணர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவர்களின் இந்த உன்னத தியாகத்திற்காக இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும்’’ எனக் கூறி அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Tags : Parliament attack anniversary ,Vice President ,New Delhi ,Parliament attack ,C.P. Radhakrishnan ,Modi ,Jaish-e-Mohammed ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!