அரியலூர்,டிச.13: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என மாவட்டக் கலெக்டர் இரத்தினசாமி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசு தினவிழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியாளர்கள், சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பக்கத்தை பெறத் தகுதியுடையவராவர்.
மேலும் இவ்விருதானது ஒரு இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற இனம், வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என தகுதி உடையவர்களுக்கு வழங்கப் படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பங்களை < https://awards.tn.gov.in/ > என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்திட வேண்டும். வருகிற 15 ம்தேதி பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஆகும். எனவே மேற்காணும் விருதுக்கு அரியலூர் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்டக் கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
