×

புளியங்கோம்பை அணை திட்டம் நிறைவேற்றப்படுமா?

சத்தியமங்கலம், டிச. 13: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் பெய்யும் மழைநீர் வீணாக ஆற்றில் கலப்பதை தடுத்துநிறுத்தி 40 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்ட புளியங்கோம்பை அணை திட்டத்தை தற்போது நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி நகராட்சி பகுதியில் புளியங்கோம்பை வனக்கிராமம் உள்ளது. குத்தியாலத்தூர், கடம்பூர் மற்றும் கம்பத்துராயன்கிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் புதிய அருவிகள் உருவாகி காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து புளியங்கோம்பை வழியாக பவானி ஆற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும் 6 மாதம் மழைப்பொழிவு காலங்களில் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரின் அளவு 2 டிஎம்சி என கணக்கிடப்படுகிறது. இந்த மழைநீர் வீணாக ஆற்றில் கலப்பதால் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

வெள்ளநீரை தடுத்து அணைகட்டி நீரை சேமிக்கலாம் என முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தின்போது புளியங்கோம்பை அணைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு புதிய அணை கட்ட நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அண்மையில் பெய்த மழையால் வனப்பகுதியில் இருந்து அருவியாக உருவெடுத்து பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த வெள்ளநீர் புளியங்கோம்பை வழியாக பவானி ஆற்றை சென்றடைந்தது. வீணாக ஆற்றில் கலக்கும் இந்த நீரை தடுத்து அணை கட்டி சேமித்தால் இப்பகுதியில் உள்ள பெரியகுளம், புளியங்கோம்பை, போலிப்பள்ளம் மற்றும் நகராட்சி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் செழிப்பாகும்.

நகராட்சி பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் உயரும். புளியங்கோம்பையை சுற்றியுள்ள ஆண்டவர்நகர், பெரியகுளம், மொண்டிகரடு போன்ற பகுதியில் கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவும். புளியங்கோம்பை அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால் இங்கு நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். வனவிலங்குகள் குடிநீர் பிரச்சனை தீரும். 40 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட புளியங்கோம்பை அணை திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வீணாக ஆற்றில் கலக்கும் நீரை தடுத்து புதிய அணை கட்டி இப்பகுதியில் கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சத்தியங்கலம் சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: சத்தியமங்கலம் நகர் பகுதியில் மலை அடிவாரத்தில் உள்ள புளியங்கோம்பை, ஓட்டக்குட்டை, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன.
கோடை காலங்களில் இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது. புளியங்கோம்பை அணைக்கட்டும் திட்டத்தை செயல்படுத்தினால் இப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேலும், மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக ஆற்றில் கலந்து கடலுக்கு போய் சேர்வது தடுக்கப்பட்டு இப்பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் அமையும். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Puliyangombai Dam ,Sathyamangalam ,Puliyangombai ,Sathyamangalam Tiger Reserve forest ,Sathyamangalam Tiger Reserve… ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...