ஈரோடு, டிச. 13: ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கோபி, கவுந்தப்பாடி மற்றும் சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பாக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய காலநிலை காரணமாக பாக்கு மரங்களில் பூச்சி தாக்குதலை கண்டறிந்து பாதுகாப்பது மிக முக்கியமாகும். அதன் அடிப்படையில் செதில் பூச்சிகளை கண்டறியும் வகையில், சீரான மாதிரி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 மரங்களை தேர்ந்தெடுத்து சோதிக்க வேண்டும். ஒவ்வொரு மரத்திலும் 2 அல்லது 3 இலைகளின் மேற்புறம் மற்றும் அடிப்பகுதி இலைகள், பாக்கு கொட்டைகள், இலை தண்டுகளில் பூச்சி தாக்குதல் தீவிரத்தை குறிக்கலாம்.
இலைகள் மஞ்சளாவது, பாக்கு கொட்டைகள் முன்கூட்டியே விழுந்து விடுவது, இலை திறன் குறைவது, ஒட்டும் தன்மை கொண்ட இலைகளில் தூசி படிவது ஆகியவை ஆரம்பகட்ட எச்சரிக்கையாகும். மேலும், இளம் காய்கள் உள்ள மரங்கள் அதிகம் உணர்திறன் கொண்டவை. இவற்றில் வளர்ச்சி நின்று விடுதல், இலை உலர்தல் போன்ற அறிகுறிகள் மூலமாக பூச்சி தாக்குதலை அறிந்து கொள்ளலாம். இவ்வாறான நிலைகள் தென்படும்போது விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மகசூல் பாதிப்பை தவிர்த்து கொள்ளலாம் என வேளாண்மைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

