×

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சித்தா மருத்துவமனை செயல்பட அனுமதிக்க வேண்டும்

திருப்பூர், டிச. 13: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தா மருத்துவமனை செயல்பட அனுமதிக்க வேண்டும் என டாக்டர்கள், பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், பழைய பஸ் நிலையம் அருகே மங்கலம் செல்லும் சாலையில் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி போதிய இட வசதியின்றி இருப்பதால் புதியதாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய பஸ்நிலையம் எதிரே 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய மாநகராட்சிக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த பகுதியில் 1989ம் ஆண்டு திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் சித்தா மருத்துவமனை பிரிவு தொடங்கப்பட்டது. நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். புதன்கிழமைகளில் நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் என 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது மாநகராட்சி தேவைக்காக சித்தா மருத்துவமனையும் காலி செய்யச்சொல்லி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது சித்தா மருத்துவமனை செயல்பட போதிய இடம் ஒதுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சித்தா டாக்டர்கள், பணியாளர்கள் கூறியுள்ளதாவது: சித்தா மருத்துவமனையை காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். ஆனால் எங்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறுகிறார்கள். ஆனால் அது வெகு தொலைவாக உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுவார்கள். இதனால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கேட்கிறோம். அங்கு தர மறுக்கிறார்கள். எனவே இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Siddha Hospital ,Tiruppur Government Medical College ,Tiruppur ,Tiruppur Government Medical College Hospital ,Tiruppur Corporation ,Mangalam ,
× RELATED பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்