×

தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.8.20 கோடி மோசடி: கடலூரை சேர்ந்த தொழிலதிபர் கைது

சென்னை: தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.8.20 கோடி மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடலூரில் கைது செய்தனர். சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். ரியல் எஸ்டேட் அதிபரான இவரிடம் கடலூரை சேர்ந்த தங்கவேல் (56) என்பவர் அறிமுகமானார். அப்போது, பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் உங்களை தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பி வெங்கட்ராமன் பல இடங்களில் இருந்து நிலங்களை விற்பனை செய்து ரூ.7.25 கோடி பணம் மற்றும் கடனாக ரூ.75 லட்சம், புதிய தொழில் தொங்க ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.8.20 கோடி கொடுத்துள்ளார்.

பின்னர் சொன்னபடி தங்கவேல், கோத்தகிரி, நீலகிரி பகுதியில் இடங்கள் வாங்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால் கொடுத்த பணத்தை வெங்கட்ராமன் கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுக்காமல் தங்கவேல் காலம் கடத்தி வந்துள்ளார். இதை தொடர்ந்து வெங்கட்ராமன் கடந்த 22ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அருணை நேரில் சந்தித்து புகார் அளித்தார். புகாரின்படி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்திய போது, ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கட்ராமனிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.8.20 கோடி பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த தங்கவேலை கடலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தில் வைத்து கைது செய்தனர்.

Tags : Cuddalore ,Chennai ,Central Crime Branch ,Venkatraman ,Nesapakkam ,
× RELATED அரசு பஸ்சில் கடத்திய 8.69 கிலோ தங்க நகை பறிமுதல் 2 வாலிபர்கள் சிக்கினர்