ராமநாதபுரம், டிச. 12: ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புதிய மினி கான்ப்ரன்ஸ் ஹால் திறந்து வைத்த தென்மண்டல ஐஜி ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் எஸ்.பி அலுவலக வளாகத்திற்குள் பயிற்சிகள், துறை சார் கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றிற்கு பயன்படும் மினி கான்ப்ரன்ஸ் ஹால் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டு உரிய நிதி ஒதுக்கி ஆணையிட்டார். இதனையடுத்து அதிநவீன சாதனங்களுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய அரங்கு அமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்ற நிலையில் இதனை தென்மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா திறந்து வைத்தார். எஸ்.பி.சந்தீஷ் உடனிருந்தார்.
தடய அறிவியல் ஆய்வக பிரிவு, குற்ற ஆவணங்கள் பிரிவு, கைரேகை பிரிவு, மாவட்ட ஆயுதப்படை ஆகிய இடங்களிலும் ஐஜி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து எஸ்.பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சட்டம் ஒழுங்கு நிலுவை வழக்குகள், போதை பொருள், தங்கம் உள்ளிட்ட சாலை, கடல்மார்க்கமாக கடத்தப்படும் கடத்தல் தடுப்பு, ரவுடிகள் ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாரந்தோறும் நடத்தப்படுகின்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாவட்டத்தில் பொறுத்தப்பட்டு வரும் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட பொதுநலன் சார்ந்தவை குறித்து கேட்டறிந்தார்.
போலீசார் பொதுமக்களிடையே நற்பெயர் பெறும் வகையில் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது டிஐஜி மூர்த்தி, எஸ்.பி சந்தீஷ் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
