×

மசினகுடி அருகே மூதாட்டியை கொன்ற புலி கூண்டில் சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி

ஊட்டி: மசினகுடி அருகே உள்ள மாவநல்லா பகுதியில் மூதாட்டியை கொன்ற புலி கூண்டில் இன்று சிக்கியது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் மக்கள் வாழும் பகுதிக்குள் சில சமயங்களில் வரும்போது, மனித விலங்கும மோதல் ஏற்பட்டு உயிர்களுப்பு ஏற்படுகிறது. கடந்த மாதம் 24ம் தேதி மசினகுடியை அடுத்த மாவநல்லா பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் ஆடு மேய்த்த நாகியம்மாள் என்பவரை புலி தாக்கி இழுத்துச் சென்றது. தலை மற்றும் உடல் தனித்தனியாக கிடந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூதாட்டியை தாக்கிய 12 வயதான டி-37 என்ற வகையை சார்ந்த அந்த ஆண் புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புலி நடமாட்டம் இருந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் புலியை பிடிக்க 4 இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டன. ஆனால் அந்த கூண்டில் சிக்காமல் புலி போக்கு காட்டி வந்தது. இருந்தபோதிலும் வனத்துறையினர் இரவு, பகலாக டிரோன் கேமரா மூலமாகவும், 29 இடங்களில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். புலி நடமாட்டம் காரணமாக மாவனல்லா சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். புலி நடமாட்டம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக இங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் வனத்துறை வாகனம் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு வந்தனர்.

இதுபோன்ற நிலையை தடுக்க விரைவில் புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து புலியை பிடிப்பதற்காக பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டது. அந்த கூண்டில் இரை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வனத்துறையினர் வைத்த அந்த கூண்டில் நேற்று இரவு பொதுமக்களை மிரட்டி வந்த புலி சிக்கியது. அந்த புலியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கையில் தற்போது முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags : Masinakudi ,Mawanalla ,Nilgiris district ,Mudumalai Tiger Reserve ,
× RELATED அரசியல் கட்சிகளின் சொத்து பட்டியலில்...