×

ஸ்டீல் விலை விவகாரம் சி.பி.ஐ. விசாரிக்க கான்ட்ராக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜன.17: தமிழகத்தில் ஸ்டீல் விலை தொடர்ந்து உயர்ந்து விடுகிறது. கடந்த மூன்று 3 மாதத்தில் 60 சதவீதம் விலை உயர்ந்தது. ஸ்டீல் மற்றும் இரும்பு பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக அரசு பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 35 முதல் 40 சதவீதம் வரை கூடியுள்ளது. அரசு பணிக்கான டெண்டர் எடுத்தவர்கள் தொழில் நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஸ்டீல் விலை மேலும் அதிகரிக்கும் நிலையிருக்கிறது. இதன்  விலையை குறைக்கக்கோரி பல்வேறு அரசு துறைகளில் டெண்டர் எடுத்தவர்கள் நேற்று பணியை புறக்கணித்து அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். கோவையில் உக்கடம் மேம்பாலம் பணி, 8 குளங்கள் சீரமைப்பு பணி, அம்ரித் குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை, மல்டி லெவல் கார் பார்க்கிங் பணி, வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, நொய்யல் ஆறு சீரமைப்பு, மாநில அளவில் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையின் பல நூறு கோடி மதிப்பிலான திட்ட பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சி காண்ட்ராக்டர்கள் சங்க செயலாளர் கேசிபி சந்திரபிரகாஷ் கூறுகையில், ‘‘இப்போதுள்ள சூழலில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்யக்கூடாது.

அப்போதுதான் விலை ஏற்றம் குறையும். பல்வேறு அரசு துறை பணிகள் எடுத்த காண்ட்ராக்ட் நிறுவனங்கள், கட்டுமான அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடக்கிறது. ஸ்டீல் விலை பழைய நிலைமைக்கு வர சாத்தியம் அதிகமாக இருக்கிறது. ஆனால் சில ஸ்டீல் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் போட்டு விலையை குறைக்காமல் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஸ்டீல் நிறுவனங்கள் மீது மத்திய அரசு சி.பி.ஐ. வைத்து விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணை கோரி அரசு காண்ட்ராக்டர் சங்கம் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம்.  ஸ்டீல் விலை உயர்வு காரணமாக  மேம்பாலம், தரைப்பாலம், மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை, அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கட்டுமானம், சீரமைப்பு பணிகள் தொடர்பான இ-டெண்டரில் விண்ணப்பிக்க ஒப்பந்த நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகிறது. மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்திருக்கிறோம்’’ என்றார்.

Tags : CBI Urging the Contractors Association ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை