சென்னை: டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவில் பெருமழை பெய்தது. இதனால் பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், பொருள் சேதம், உயிர் சேதம் என இலங்கை நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் புயலால் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண உதவி பொருட்கள் ஒன்றிய அரசுடன் இணைந்து அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்று முதல் கட்டமாக ரூபாய் 1 கோடியே 19 லட்சத்து 77 ஆயிரத்து 800 மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.அதில் குறிப்பாக, சர்க்கரை (300 மெட்ரிக் டன்), ரூ. 3,44,92,200, பருப்பு பொருட்கள்(300 மெட்ரிக் டன்), ரூ. 31,94,500, 5000 புடவைகள் & 5000 வேட்டிகள் (3.25 மெட்ரிக் டன்), ரூபாய். 15,22,500 டவல்கள் (2.30 மெட்ரிக் டன்), ரூபாய். 57,75,000 10,000 போர்வைகள் (7.25 மெட்ரிக் டன்), ரூ. 1,05,00,000, பால்பொருட்கள்(25 மெட்ரிக் டன்) மற்றும் ரூ. 23,60,000, 1000 தார்பாய்கள் (7.5 மெட்ரிக் டன்) ஆக மொத்தம் ரூபாய். 6.98 கோடி (645.30 மெட்ரிக் டன்) மதிப்புள்ள நிவாரண பொருட்களை இலங்கை துணை உயர் ஆணையர் கீதீஸ்வரன் கணேசநாதனிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்து சென்னை துறைமுகத்திலிருந்து கப்பலை கொடியசைத்து இலங்கையில் உள்ள திருகோணமலைக்கு அனுப்பி வைத்தார்.
அத்துடன், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சர்க்கரை (150 மெட்ரிக் டன்) ரூபாய் 59,88,900/- பருப்பு பொருட்கள்(150 மெட்ரிக் டன்) ரூ. 1,72,46,100/- ஆக மொத்தம் ரூபாய் 2 கோடியே 32இலட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண
பொருட்கள் தமிழ்நாடு அரசால் மற்றொரு கப்பல் மூலம் இலங்கை வாழ் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், சென்னை துறைமுகம் துணைத் தலைவர் விசுவநாதன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் வள்ளலார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர். நமது நாட்டில் எந்த மாநிலத்துக்கு பாதிப்பு என்றாலும் உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிக்கரம் நீட்டி வருகிறார். அதோடு நமது தொப்புள்கொடி உறவுகளான இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு என்றதும் இலங்கைக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை முதல்வர் அறிவித்து அனுப்பி வைத்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
