×

தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்ததால் பரபரப்பு; கேரளாவில் ரயிலை கவிழ்க்க சதியா?: போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இன்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தின் நடுவில் ஆட்டுக்கல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் தக்க சமயத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மைசூரு- திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை கொச்சி பச்சாளம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் நடுவே ஏதோ ஒரு பொருள் கிடைப்பதை என்ஜின் டிரைவர் கவனித்தார்.

அதைத்தொடர்ந்து அவர் ரயிலை நிறுத்தி இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தின் நடுவே ஒரு பெரிய ஆட்டுக்கல் கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக எர்ணாகுளம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசாரும், ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் ஆட்டுக்கல் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பிறகு மைசூரு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இது ரயிலை கவிழ்க்க நடந்த சதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தக்க சமயத்தில் ரயில் இன்ஜின் டிரைவர் ஆட்டுக்கல்லை பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kochi, Kerala ,Mysore ,Northern Express ,Pachalam ,Kochi ,
× RELATED சபரிமலையில் ஐயப்பனுக்கு...