×

‘ஆசிட்’ வீச்சு வழக்கு 16 ஆண்டுகள் இழுபறி; ‘தேசிய அவமானம்’ என சுப்ரீம்கோர்ட் கண்டனம்: நாடு முழுவதும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: ஆசிட் வீச்சு வழக்கு விசாரணையில் ஏற்படும் 16 ஆண்டுகால தாமதம் தேசிய அவமானம் என்று கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஷஹீன் மாலிக் என்ற பெண், டெல்லி நீதிமன்றத்தில் தனது வழக்கு கடந்த 16 ஆண்டுகளாகத் தீர்ப்பாகாமல் இழுபறியில் உள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண்பதில் இவ்வளவு பெரிய தாமதம் ஏற்படுவது வேதனையளிப்பதாகத் தெரிவித்தது.

இது நீதித்துறை அமைப்பையே கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும், இதுபோன்ற செயல்கள் தேசிய அவமானம் என்றும் நீதிபதிகள் மிகக் கடுமையாக விமர்சித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்யத் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதாகவும், தாமதத்திற்கான காரணத்தை விளக்கிப் புதிய மனுவைத் தாக்கல் செய்யுமாறும் ஷஹீன் மாலிக்கிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றப் பதிவாளர்கள், தங்கள் வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள அனைத்து ஆசிட் வீச்சு வழக்குகள் குறித்த விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், ‘இத்தகைய வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் தினசரி அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தினர். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை, குறிப்பாக ஆசிட் உட்கொள்ள நேரிட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்கீழ் கொண்டு வந்து, அவர்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இவர்களுக்கு இலவச சிகிச்சை, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த துஷார் மேத்தா, ‘குற்றவாளிகள் மீது எவ்வித கருணையும் காட்டக்கூடாது’ என்று தெரிவித்தார்.

Tags : Supreme Court ,New Delhi ,Shaheen Malik ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...