×

கொலை மிரட்டல், கட்டாய ஒப்பந்த விவகாரம்; ரூ.25 கோடி கேட்டு ஹாலிவுட் தம்பதி மீது வழக்கு: பணம் பறிக்கும் நாடகம் என நடிகர் ஆவேசம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: வில் ஸ்மித் மற்றும் அவரது மனைவி மீது முன்னாள் நண்பர் ஒருவர் 30 லட்சம் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் 40 ஆண்டுகால நண்பராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் பிலால் சலாம் என்பவர், கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஸ்மித் தம்பதிக்கு எதிராகப் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வில் ஸ்மித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, அவரது மனைவி ஜடா பிங்கெட் தன்னை நேரில் மிரட்டியதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜடாவின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசினால் ‘காணாமல் போய்விடுவாய்’ அல்லது ‘துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவாய்’ என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ரகசியக் காப்பு ஒப்பந்தத்தில் கட்டாயப்படுத்திக் கையெழுத்து வாங்கியதாகவும் பிலால் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், நிதி இழப்பு மற்றும் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக வில் ஸ்மித் தம்பதி தனக்கு 30 லட்சம் டாலர் (சுமார் ரூ.25 கோடி) நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிலால் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கால் வில் ஸ்மித் மற்றும் ஜடா பிங்கெட் கடும் கோபமடைந்துள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அவர்கள் தரப்பில் கூறுகையில், ‘இவை அனைத்தும் அப்பட்டமான பொய்கள்’ என்றும், ‘பணம் பறிப்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்’ என்றும் விமர்சித்துள்ளனர். பிலால் சலாம் ஒரு சந்தர்ப்பவாதி என்றும், தங்களது புகழைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கத் துடிப்பதாகவும் ஸ்மித் தம்பதியினர்தெரிவித்துள்ளனர்.

Tags : Hollywood ,LOS ANGELES ,Will Smith ,
× RELATED பாகிஸ்தானின் முதல் முப்படை தலைமை தளபதியாக அசிம் முனீர் நியமனம்: பாக். அரசு