×

ஈரான் போர் குறித்து தவறான தகவல் பரப்பிய 19 இந்தியர் உட்பட 35 பேர் துபாயில் கைது: 35 லட்சம் பேருக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

 

துபாய்: அமீரகத்தில் வான்வழித் தாக்குதல் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்பிய 19 இந்தியர்கள் உட்பட 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் நாடு அமீரகத்தின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் பதில் தாக்குதல்களை நடத்தியது. இதனால் கடந்த சில வாரங்களாகவே அந்தப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் காட்சிகளைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த 5 இந்தியர்கள் உட்பட 10 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இது போன்ற காட்சிகள் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை எதிரி நாடுகளுக்குக் கசியவிடும் அபாயம் இருப்பதாகக் கூறி, அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் மற்றொரு தரப்பினர், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமீரகத்தின் முக்கிய அடையாளச் சின்னங்கள் தகர்க்கப்படுவது போன்ற போலியான காட்சிகளை உருவாக்கி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், 5 இந்தியர்கள் உள்ளிட்ட 6 பேர் ஈரானின் தாக்குதல்களைப் புகழ்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வதந்திகளைப் பரப்பிய இதர 9 இந்தியர்கள் என மொத்தம் 35 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமீரக சட்டப்படி இவர்களுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 1,00,000 திராம் (இந்திய மதிப்பில் சுமார் 22.6 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தண்டனைக்குப் பிறகு வெளிநாட்டவர் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அமீரகத்தில் வசிக்கும் சுமார் 35 லட்சம் இந்தியர்களுக்காக அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், ‘ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடக்கும் இடங்களை எக்காரணம் கொண்டும் வீடியோ எடுக்க வேண்டாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகளையோ அல்லது வைரல் வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். அரசின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை முறையாகப் பின்பற்றி, பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்’ என்று இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Dubai ,Iran ,embassy ,UAE ,US ,Israel ,UAE… ,
× RELATED அமெரிக்க அரசின் மதச்...