×

நெல்லையில் செத்து மடியும் கோழிகள், காகங்கள்: பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமா?

நெல்லை: நெல்லையில் கோழிகள், காகங்கள் செத்து மடிந்து வருகின்றன. பாளையங்கோட்டை செந்தில்நகர் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் களம் இறங்கி அவற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை தமிழக கால்நடைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பறவை காய்ச்சலை தடுக்கும் வகையில் தனியார் கோழி பண்ணைகளை கால்நடை நோய் புலனாய்வு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை 14வது வார்டு செந்தில்நகர் பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் முப்பிடாதியம்மன் கோயில் கீழத்தெரு அருகே வெட்டுவான்குளத்திற்கான ஓடையை ஒட்டிய பகுதிகளில் தற்போது சுகாதார சீர்கேடுகள் பெருகியுள்ளன.

மாநகராட்சியில் பன்றி வளர்ப்பு தடை செய்யப்பட்டுள்ள சூழலில், அப்பகுதியில் மட்டுமே 20க்கும் மேற்பட்ட பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. தண்ணீருக்கான நீரோடையும், கழிவுநீரும் ஒருங்கே சேரும் அந்த இடத்தில் துர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. அங்குள்ள கோழி பண்ணையில் நேற்று 5 கோழிகள் செத்து மடிந்தன. நீரோடை அருகே 3 காகங்களும், 2 வாத்துகளும் இறந்த நிலையில், அவற்றை பன்றிகள் கடித்து குதறின. இதனால் பறவைக்காய்ச்சலோ என்று பீதி அடைந்த பொதுமக்கள் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். துப்புரவு பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்த காகங்கள் மற்றும் கோழிகளை அகற்றும் பணியில் இறங்கினர்.

Tags : paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை