புதுடெல்லி: மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்படும் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திற்கு ‘சேவா தீர்த்தம்’ என புதிய பெயரிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய விஸ்டா மறுவளர்ச்சி திட்டத்தின் கீழ், டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகர், அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திற்கு ‘சேவா தீர்த்தம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சேவா என்றால் சேவை, தீர்த்தம் என்றால் புனித்தலம். எனவே பிரதமர் அலுவலகம் என்பது சேவை உணர்வை பிரதிபலிக்கும் பணியிடமாகவும், தேசிய முன்னுரிமைகளை காக்கும் புனித தலமாகவும் உணர்த்தும் வகையில் இருக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும், அதிகாரத்தில் இருந்து சேவைக்கு மாறும் ஒன்றிய அரசின் தத்துவத்தை பிரதிபலிப்பதாகவும் கூறி உள்ளனர்.
சமீபத்தில், ஆளுநர் இல்லங்களின் பெயர் ராஜ்பவனுக்கு பதிலாக லோக் பவன் (மக்கள் மன்றம்) என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை ராஜபாதை கடமை பாதை என்றும், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் லோக் கல்யாண் மார்க் எனவும், மத்திய செயலகம் கடமை மன்றம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
