சென்னை: தொழில் துறை நிபுணர்களின் திறன்களை மேம்படுத்த ஊக்குவிக்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான விதிகளில் சில மாற்றங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) தளர்த்தியுள்ளது. அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் பிரத்யேக படிப்புகளில் சேர 80 சதவீதம் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் நிபுணர்களின் திறனை மேம்படுத்தும் படிப்புகளை நடத்தவும், அவர்கள் படித்து பயன்பெறவும் உதவும் என்றும் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற திறன்மேம்பாட்டு படிப்புகளை நடத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஏஐசிடிஇ.யின் திருத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை விதிகள், என்பிஏ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் அல்லது வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளின் எண்ணிக்கைக்கு சமமாக புதிய படிப்புகளை தொடங்கவும், என்பிஏ அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் கூடுதல் படிப்புகளை அதிகரிக்கவோ அல்லது தொடங்கவோ இந்த திருத்தம் அனுமதிக்கிறது.
இதுபோன்ற விதிகள் மூலம் பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் கணினி தொடர்பான படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும் அனுமதிக்கும் என்றும் பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் தெரிவிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முறையான கல்வியை கற்பிப்பார்கள் என்றும் பரிந்துரைத்தார். வேலை பாதுகாப்பு இல்லாத தொழில் நுட்பத்துறையில் உள்ள வல்லுநர்கள், அதை விட்டு கல்வித்துறைக்கு மாறுவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.
கவர்ச்சிகரமான ஊதியம் அந்த வல்லுநர்களை கல்லூரிக்கு அழைத்து வரும் என்றும் பாலகுருசாமி தெரிவித்துள்ளார். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ரூ.100 கோடி அதற்கும் மேல் முதலீடுகளை பெற்றுள்ள தொழில் நிறுவனங்களுடன் தொழில் கூட்டாண்மை வைத்து புறவழிக்கற்றலுக்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். அனுபவ கற்றலுக்கான பாடத்திட்டம் மற்றும் தொழில் துறை நிபுணர்களால் கூட்டாக உருவாக்கப்பட வேண்டும். தொழில் துறைகளில் பணியாற்றும் நிபுணர்களும் இந்த படிப்புகளில் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று ஏஐசிடிஇ.யின் திட்டம் கூறுகிறது.
