×

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட செயல்பாடு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக.2ம் தேதி சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். சிறப்பு முகாம் ஒன்றிற்கு 1.08லட்சம் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாநிலம் முழுவதும் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு, 9,86,732 பேர் பயனடைந்துள்ளனர்.

அந்தவகையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும், மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க போதுமான அளவிற்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும், முகாம்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து, மக்களுக்கு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தனியாக அறை ஏற்படுத்திட வேண்டும் என்றும், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்களில் உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் இந்த முகாம்களில் நோய் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

* நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் சிறப்பாக அமைய வேண்டும்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட முகாம்கள் – 632, பயன்பெற்றவர்கள் – 9,86,732, மருந்து பெற்றவர்கள் – 5,65,924. இதில், தூய்மைப் பணியாளர்கள் – 65,363, மாற்றுத் திறனாளிகள் – 39,475. இப்படி, ஏழை – எளிய மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர் என்ற தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. புற்றுநோய், இதயநோய், காசநோய் என பலருக்கும் தொடக்க நிலையிலேயே நோய்கள் கண்டறியப்பட்டு, அவர்களது மேல் சிகிச்சையும் கண்காணிப்பு செய்யப்படுவதை இத்திட்டத்தின் முக்கிய வெற்றியாக பார்க்கிறேன். அடுத்தடுத்து, நடைபெறவுள்ள முகாம்கள் மேலும் சிறப்பாக அமைந்திட, நீங்கள் சொன்ன கருத்துகளை அதிகாரிகளுக்கு உத்தரவுகளாக வழங்கி இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Stalin ,Chennai ,M.K. Stalin ,Tamil Nadu ,Chennai, Santhome, St. Pete ,
× RELATED அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி...