- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- மாற்றுத்திறனாளிகளின் சர்வதேச நாள்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்…
சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் “மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்\\” என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
‘தமிழ்நாடு உரிமைகள் திட்டம்’ மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும்வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத்திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
