×

அறிவிப்பை வெளியிட்டார் நயினார் ஏப்.10ல் தமிழக சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் இருக்கு?

தென்காசி: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘50 வருட அரசியல் அனுபவம் உள்ள செங்கோட்டையன் மஞ்சள் கலரில் துண்டு போர்த்தியுள்ளார். கடந்த ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்த செங்கோட்டையன் தற்போது நல்லாட்சி இல்லை என கூறுவது வருத்தமான செய்தி. அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் பல்வேறு துறைகளை வழி நடத்தியவர். மோசமான ஆட்சி என்று கூறுவதை படித்தவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை சிந்திக்க மறந்து விட்டார். திருநாவுக்கரசர் செங்கோட்டையனை சந்தித்திருப்பது இங்கிருந்து அங்கு சென்ற செங்கோட்டையன் அங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் போவார், எங்கு போவார் என்பதை சொல்ல முடியாது. எந்த தனி நபரையும் வைத்து எந்த கட்சியும் இல்லை.

என்னை வைத்தும் பாஜ இல்லை. எனது கணிப்பு சரியாக இருந்தால் 2026 ஏப்ரல் 10ம் தேதி தேர்தல் நடக்கும். இன்னும் 100 நாட்கள் உள்ளது தேர்தலுக்கு முந்தைய நாள் கூட நிறைய மாறுதல்கள் வரும். அரசியலில் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் காற்று அடிக்கும். மக்கள் சக்தி ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும்’’ என்றார். ஏற்கெனவே தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டிய தேர்தல் அறிவிப்பை நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* எஸ்ஐஆர் மூலம் 75 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
‘எஸ்ஐஆர் மூலம் பீகாரில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற அறிவிப்பிற்கு பின் இது சுமார் 45 லட்சமானது. தமிழ்நாட்டில் 75 லட்சம் பேர் வரை நீக்கப்படலாம் என உத்தேச கணக்கு தெரிவிக்கிறது. 2002க்கு பிறகு இறந்து போன பலர் இன்னமும் பட்டியலில் உள்ளனர். அவர்கள் நீக்கப்பட வேண்டும். புதியவர்கள் சேர்க்கப்பட வேண்டும் இதுதான்’ எஸ் ஐ ஆர் என்றார் நயினார் நாகேந்திரன்.

* டிடிவிக்கு மீண்டும் அழைப்பா?
டிடிவி.தினகரனை மீண்டும் கூட்டணிக்கு அழைப்பீர்களா? என்ற கேள்விக்கு, ‘டிடிவி.தினகரனிடம் நட்பு ரீதியாக பேசினாலும், எங்கள் கூட்டணியை விட்டு வௌியேறி விட்டார். இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்? என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று நயினார் தெரிவித்தார்.

* செங்கோட்டையனுக்கு தோல்விதான்
‘‘செங்கோட்டையன் விஜய் கட்சியில் போய் சேர்ந்து விட்டாரே?’’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘போய் சேர்ந்து விட்டார் என சொல்லாதீர்கள் அந்த கட்சியில் இணைந்தார் என தௌிவாக சொல்லுங்கள். தவெகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனனிடம் சென்றது போல் சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு தோல்வி தான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைக்கும்’’ என்று நயினார் தெரிவித்தார்.

* அண்ணாமலை தனிக்கட்சியா?
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வருகிறதே என்று கேட்டதற்கு, நயினார் நாகேந்திரன், ‘அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார்’ என்று பதில் அளித்தார்.

Tags : Nainar ,Tamil Nadu Assembly Election ,Election Commission ,Tenkasi ,BJP ,president ,Nainar Nagendran ,Sengotthaiyan ,Sengottaiyan ,AIADMK government ,
× RELATED எதுவும் தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை: அமைச்சர் ஆர்.காந்தி தாக்கு