- பாஜக
- அமைச்சர் I. பெரியசாமி
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- கிராமப்புற வளர்ச்சி
- அமைச்சர்
- I. பெரியசாமி
- மகாத்மா காந்தி
சென்னை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரை மாற்றி, மகாத்மா காந்தியின் பெயரையே இருட்டடிப்பு செய்யச் சதி நடக்கிறது. மக்கள் தொகை குறைப்பில் தமிழ்நாடு செய்து காட்டிய சாதனை, நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு என்ற அநீதியை நம் மீது சுமத்த திட்டமிட்டிருக்கிறார்களோ அதேபோல வறுமையை ஒழிப்பதற்கான தண்டனையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மாற்றப்படும்.
புதிய திருத்தங்களால் தமிழ்நாட்டு மக்கள் பெரிய இழப்பைச் சந்திப்பார்கள். ஏற்கனவே முறையற்ற ஜிஎஸ்டி நிதிப் பகிர்வு மூலம் தமிழ்நாட்டின் நிதியை ஒன்றிய பாஜ அரசு குறைந்தது. கல்வி நிதி, பேரிடர் நிதி, வளர்ச்சி நிதி என எந்த நிதியையும் முறையாக ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்தார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்த மக்களுக்கு ஒதுக்க வேண்டிய 4,000 கோடி ரூபாய் நிதியை முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்தி ஏழைகள் வயிற்றில் அடிதத்து ஒன்றிய பாஜ அரசு.
இப்போது மறைமுகமாக இந்த திட்டத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களை வெளியேற்றும் முயற்சியைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், 92 லட்சம் ஏழை எளிய கிராமப்புற மக்கள் குறிப்பாகக் கிராமப்புறப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதிப் பங்கீட்டிலும் மாற்றம் கொண்டுவரப் போகிறது ஒன்றிய அரசு. இதுவரை இருந்ததை மாற்றி, ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியையும், மாநில அரசு 40 சதவிகித நிதியையும் பங்களிக்க வேண்டும் என்று மாற்றப்படுகிறது.
ஏற்கனவே உரிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும், ஒன்றிய அரசு, இந்த திட்டத்துக்கான பெரும்பகுதி நிதியை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டுத் தன்னை தற்காத்துக் கொள்ள முயல்கிறது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான பணியாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்திருக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் மட்டும் சுமார் 2.34 கோடி பணியாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர். அதில், சுமார் 1.2 கோடி பேர் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். உத்தரபிரதேசத்துக்கு வழங்கவேண்டிய 1,340 கோடி ரூபாயில் வெறும் 3.18 கோடி ரூபாய்தான் நிலுவையில் உள்ளது.
இதே நிலைதான், பாஜ ஆளும் பிற மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவிலும். ஆனால், பாஜ அல்லாத மாநிலங்களில் நிதியை நிலுவையில் வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி கள்ள மவுனம் காக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடிய சட்ட திருத்தத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜ அரசையும் அதற்கு துணைபோகும் அடிமைகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் புறக்கணிப்பார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜவிற்கும் அதனை ஆதரிக்கும் அடிமைகளுக்கும் மக்கள் வாக்குச்சாவடியில் பதில் தருவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
