×

சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ் 2025 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ் 2025 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (1.12.2025) அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சி.எஸ்.ஐ.மெட்ராஸ் டையோசீஸ் சார்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ்- 2025 நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஆற்றிய உரை.

இன்றைக்கு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பாரா தடகள வீரர்களுக்கு பரிசுகளை வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு நாட்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை உறுதியோடு நடத்திக் கொண்டிருக்கக்கூடிய சி.எஸ்.ஐ மெட்ராஸ் டையோசீஸ்க்கு (CSI Madras Diocese) என்னுடைய வணக்கத்தையும், பாராட்டுகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே உறுதியோடும். உணர்ச்சியோடும் இந்த நிகழ்ச்சியில், பரிசளிப்பு விழாவில் உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்

குறிப்பாக, இந்த நிகழ்ச்சியை, சாம்பியன்ஸ் பியாண்ட் பாரியர்ஸ் (Champions Beyond Barriers) என்கின்ற அருமையான ஒரு தலைப்பில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே, இங்கு இருக்கக்கூடிய மாற்றுத்திறன் குழந்தைகளும், சிறப்பு குழந்தைகளும் தடைகளை உடைத்து இன்றைக்கு உண்மையான சாம்பியன்களாக உருவாகி இருக்கிறார்கள். இன்றைக்கு இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பாரா-தடகள வீரர்கள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.

மற்ற மாநிலங்களில் மாற்றுத்திறன் வீரர்கள், பதக்கங்களை வென்ற பிறகுதான் அவர்களுடைய மாநிலத்தில் பரிசுத்தொகையைக் கொடுப்பார்கள். ஆனால், நம்முடைய தமிழ்நாட்டில், நம்முடைய முதலமைச்சர் மட்டும்தான், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலமாக அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உதவித்தொகையை வழங்கி வருகிறார். வெற்றி பெற்ற பிறகு, அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையும் வழங்கி சிறப்பிக்கின்றார் நம்முடைய முதலமைச்சர்.

மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு மாநிலம்தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாகச் சிறப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த நான்கு வருடங்களில் மட்டும். 250 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு 30 கோடி ரூபாய் அளவிற்கு உயரியஊக்கத்தொகையை நம்முடைய முதலமைச்சர் வழங்கி இருக்கின்றார். சுமார் 500 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கும், பல்வேறு சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக சுமார் 8 கோடி ரூபாய் நம்முடைய முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.

தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த 5 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசுத் துறையிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் அரசு வேலை வாய்ப்பையும் நம்முடைய முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். இந்த ஆண்டு, 25 மாற்றுத்திறன் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று முதலமைச்சர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படுகின்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், கடந்த 3 வருடங்களில் மட்டும் 8 ஆயிரத்து 800 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகையையும் நம்முடைய அரசு வழங்கி இருக்கிறது. மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்காக, தலா 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில்5 மாவட்டங்களில் சிறப்பு பாரா விளையாட்டு மைதானம் (Special Para Arena) அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் புதிதாக மேலும், மாவட்டங்களில் 6 பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கின்ற பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சென்னையில், நவீன வசதிகளுடன் கூடிய பாரா பேட்மிண்டன் அகாடமி முதன்முறையாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த வசதிகளை எல்லாம் இங்கு வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் நீங்கள் பயன்படுத்தி, பல மாற்றுத்திறன் வீரர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் ஒரே இலட்சியம். அப்படிச் சாதித்த ஒரு மாற்றுத்திறன் வீரரைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் தம்பி மனோஜ். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மனோஜ். தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக அவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு விளையாட்டில் மிகப்பெரிய ஆர்வமும், திறமையும் இருந்தது. தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்திருந்தார் மனோஜ் . அவருக்குப் பெரிய பெரிய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அந்தப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான போதுமான நிதி வசதி அவரிடத்தில் இல்லை.

நம்முடைய முதலமைச்சரை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார் மனோஜ். நம்முடைய முதலமைச்சர், மனோஜ்க்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக நிதி உதவியை உடனே வழங்க உத்தரவிட்டார்கள். நாங்களும் நிதி உதவி கொடுத்தோம். அதைப்பெற்றுச் சென்ற தம்பி மனோஜ், இன்றைக்குப் பல தேசிய மற்றும் சர்வதேச பாரா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு 160 பதக்கங்களைக் குவித்து, வெற்றிகளைத் தேடித்தந்து கொண்டிருக்கிறார். அவரின் திறமையைப் பாராட்டி, இன்றைக்கு தமிழ்நாடு அரசு சார்பில், அவருக்கு இதுவரை 50 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகையை நம்முடைய அரசு கொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு அரசு வேலையையும் நம்முடைய முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.

தம்பி மனோஜுக்கு சென்ற வருடம் மதுரையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலும் நான் சென்று கலந்துகொண்டேன். சென்ற வாரம் நவம்பர் 27-ஆம் தேதி அன்று, உங்களுக்குத் தெரியும், அது என்னுடைய பிறந்தநாள். அன்றைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தம்பி மனோஜ் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறினார். அன்றைக்குதான், அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக, அந்த நல்ல செய்தியை என்னிடத்தில் கூறினார். இப்படி, நம்முடைய முதலமைச்சர், நம்முடைய திராவிட மாடல் அரசும் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளில் மனோஜ் என்ற ஒரு மாற்றுத்திறனாளி வீரரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை இந்த அளவிற்கு நம்முடைய அரசு மாற்றிக் காட்டியிருக்கிறது.

எனவே, இங்கே கூடி இருக்கக்கூடிய உங்களில் இருந்து ஏராளமான மனோஜ்கள் உருவாக வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் ஒரே லட்சியம். ஆகவே, மாற்றுத்திறன் வீரர்கள் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு எல்லா வகையிலும், நம்முடைய அரசும், முதலமைச்சரும், நம்முடைய துறையும், நானும் துணை நிற்போம் என்று சொல்லிக் கொண்டு, பரிசுகளைப் பெற்றுள்ள அத்தனை வீரர், வீராங்கனைகளுக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ.அருண், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, இ.ஆ.ப, மெட்ராஸ் டயோசீஸ் பிஷப் பால் ஃபிரான்சிஸ் ரவிச்சந்திரன், சி.எஸ்.ஐ. மெட்ராஸ் டையோசீஸ் நிர்வாகிகள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர். வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Deputy Chief Minister ,Adyanidhi Stalin ,Champions Beyond Barriers 2025 ,Chennai ,Deputy Chief Minister Assistant Minister ,Deputy Chief Minister Assistant Secretary ,Stalin ,
× RELATED வரும் டிச.15ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!