சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகரை இன்று காலை புறப்பட்ட மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடுவழியில் பழுதாகி நின்றது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அருகிலுள்ள மெட்ரோ நிலையமான உயர்நீதிமன்ற நிலையத்திற்கு சுமார் 500 மீட்டர் நடந்து செல்லுமாறு ஒரு அறிவிப்பு வந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
சுரங்கப்பாதையில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மின் தடை அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டிருக்கலாம் எனவும்,மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிகள் சிக்கிகொண்ட போது ரயிலில் மின்சாரம் இல்லை என பயணிகள் கூறுகின்றனர். தொடர்ந்து பயணிகள் ரயிலில் இருந்து வெளியேறி சுரங்கபாதையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
