×

சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் துணை முதல்வர் நேரில் ஆய்வு: பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டார்

சென்னை: சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று, சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மிகப்பெரிய எல்.ஈ.டி கண்காணிப்பு திரைகளில் கால்வாய்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கால்வாய்களில் நீர் தடையின்றி செல்வதையும், வெவ்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுகின்றதா என்று சுரங்கப்பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து கணினியில் பார்வையிட்டு, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டிற்கு வருகின்ற புகார்கள் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து புரசைவாக்கம் தானா தெரு, செல்லப்பா தெரு ஆகிய இடங்களில் மழைநீரை டிராக்டருடன் இணைக்கப்பட்ட அதிக சக்தி வாய்ந்த பம்புகள் மூலம் அகற்றும் பணிகளையும், புரசைவாக்கம் ஓட்டேரி கால்வாயில் நீர் தடையின்றி வெளியேறி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் எஸ்.எஸ். புரம் வெங்கட்டம்மாள் சமாதி சாலை பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு மேற்கொண்டு, மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Chennai Corporation ,Chennai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Command and Control Center ,Tamil Nadu ,Chennai Corporation… ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் ரிமோட்...