×

வெறுப்பு அரசியலை தூக்கி பிடிக்கிறார் விஜய்: திருமாவளவன் தாக்கு

 

வேலூர்: வேலூர் விஐடியில் நடந்த விழாவில் நேற்று கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: குரூப் 2 தேர்வு பணியிடங்களுக்கான எண்ணிக்கை குறைவாக அறிவிக்கப்படுவது என்பது வேலையில்லா நெருக்கடி அதிகரித்து வருவதை காட்டுகிறது.

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒன்றிய அரசின் கொள்கை வகுக்கப்பட வேண்டும். தனியார் மயமாக்கல், ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் முறை, தொகுப்பூதிய அடிப்படையிலான பணியாளர்களை நியமிப்பது போன்றவைதான் இதற்கு காரணம். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் உரிய நேரத்தில் குரல் எழுப்புவோம்.

ஆளுநர் மாளிகைக்கு, லோக் பவன் ‘மக்கள் மாளிகை’ என்று பெயர் மாற்றம் செய்திருப்பதை வரவேற்கிறோம். காவல்துறை குற்றவாளிகளை அண்மைக்காலமாக சுட்டு பிடிப்பது ஏற்புடையதல்ல. தவெகவை பார்த்து திமுகவோ, விசிகவோ அச்சப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வந்ததை முதலில் வாழ்த்தி வரவேற்ற இயக்கம் விசிக.

ஆனால் அவர் இதுவரை கொள்கை சார்ந்த அரசியல் பேசாமல் வெறுப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார். உடனடியாக ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற வேட்கையோடு ஆளும் கட்சியை விமர்சிப்பது என்பதை தாண்டி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் ஜனநாயக சக்திகள் அவருக்கு அறிவுரை சொல்லி வழிகாட்டுவது போன்ற கருத்தை சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vijay ,Thirumavalavan ,Vellore ,Viduthalai Siruthaigal Party ,Vellore VIT ,
× RELATED பாஜ தேசிய செயல் தலைவராக பீகார்...