×

பல்வேறு மாவட்டங்களில் 2வது நாளாக விடிய விடிய கொட்டிய மழை 113 வீடுகள் இடிந்தன; 7 பேர் பலி: முகாம்களில் மக்கள் தஞ்சம்: டெல்டாவில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா பயிர், உப்பளங்கள் மூழ்கியது

 

சென்னை: டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. டெல்டா மாவட்டங்களில் 2 நாளாக விடிய, விடிய மழை கொட்டியதில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் மூழ்கியது. சுமார் 1,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழைக்கு பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 28ம்தேதி பகலில் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வந்தது.

நேற்று முன்தினம் பகல், இரவு என நீடித்த மழை நேற்று காலையிலும் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நாகை, மயிலாடுதுறையில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கின. 3 நாட்களாக தண்ணீரில் கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகஸ்தியன்பள்ளி பகுதியில் உள்ள உப்பளங்கள் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. உப்பு குவியல்கள் மழைநீரில் கரைந்து வருகிறது.

நாகை கீச்சாங்குப்பம் கடற்கரையில் மின்கம்பம் சாய்ந்து விசைப்படகு சேதமடைந்தது. மாவட்டத்தில் 10 மின் கம்பம், 35 மரங்கள் முறிந்து விழுந்தது. 80 வீடுகள் இடிந்து விழுந்தன. 27 கால்நடைகள் இறந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 11 வீடுகள் சேதமடைந்துள்ளது. 8 கால்நடைகள் உயிரிழந்தது. திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று 3வது நாளாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. புயல் எச்சரிக்கை காரணமாக டெல்டாவில் 1 லட்சம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. திடீரென கடல் சீற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்களுக்கு இன்று (டிச. 1) மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது’’ என மீன்வளத்துறை தெரிவித்து உள்ளது. மழை காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் வெண்மணச்சேரி தென்பாதி கீழத்தெருவை சேர்ந்தவர் சரோஜா(60). கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டின் மண்சுவர் இடிந்து சரோஜா உயிரிழந்தார். இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி உடையார் தெருவை சேர்ந்தவர் முத்துவேல்(56). கூலி தொழிலாளி. இவரின் மகள்கள் கனிமொழி(21) பி.பி.ஏ.,பட்டதாரி. ரேணுகா(20) டிப்ளமோ அக்ரி படித்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான பழைய ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் நேற்று முன்தினம் தூங்கியுள்ளனர். கனமழையால், நேற்று முன்தினம் இரவு அருகில் இருந்த அவரது மற்றொரு பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, நான்கு பேரும் தூங்கி கொண்டிருந்த வீட்டு சுவரின் மேல் விழுந்தது. இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ரேணுகா நள்ளிரவில் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் வசித்தவர் பிரதாப் (19). இவர் நேற்று பைக்கில் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தபோது காளியம்மன் கோயில் அருகே தொடர் காற்றுடன் கூடிய மழையால் அறுந்து தொங்கிய மின் கம்பியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். கடலூரை டிட்வா புயல் நேற்று கடந்து சென்ற நிலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. 19 வீடுகள் இடிந்தன. 2 கால்நடைகள் இறந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமம், புது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (55), விவசாயி. இவர் நேற்று மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்று விட்டு திரும்பிய போது, மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சுப்பிரமணி உயிரிழந்தார். ஒரு பசு மாடும் இறந்தது.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் புதுகாலனி சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமையா (60). இவர், போடி அருகே போஜப்பன் நகரை சேர்ந்த ஒருவரின் வீடு கிரகப்பிரவேசத்திற்கு நேற்று பசு மாட்டுடன் சென்றார். பூஜையின் போது பசு மாட்டை புதிய வீட்டிற்குள் கொண்டு சென்று விட்டு வெளியே வந்தபோது, பலத்த மழை மற்றும் ஒலி பெருக்கியில் பாட்டு சத்தத்தால் மாடு மிரண்டு ஓடியது.

மாட்டை பிடிக்க சென்ற ராமையா காம்பவுண்ட் சுவரில் இருந்த மின்சார பெட்டியில் கை வைத்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள சக்கம்பட்டி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள், மழை காரணமாக சக்கம்பட்டி, திருவள்ளுவர் காலனியை சேர்ந்த மணி (58) என்பவர் கால் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். திருவாடானை அருகே 2 வீடுகளும், சிக்கல் அருகே ஒரு வீட்டு சுவரும் இடிந்து சேதமடைந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பைச் சேர்ந்தவர் பலவேசம் (85). இவர் 100 நாள் வேலை திட்ட வேலைக்கு சென்று வந்தார். 2 மனைவிகள். ஒரு மனைவி இறந்து விட்டார். 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் இல்லாமல் சிவகளை பரும்பு வடக்கு தெருவில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையினால் வீட்டு மண் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்து பலவேசம் பரிதாபமாக இறந்தார்.

* இயல்பு நிலைக்கு திரும்பிய தென் மாவட்டங்கள்

மலைப்பிரதேசத்தை போல காணப்பட்ட ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் நேற்று காலை முtதல் வெயில் தென்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் நேற்று அன்றாட பணிகளுக்கு சென்று இயல்பு நிலைக்கு திரும்பினர். கடல் சீற்றம் இன்றி அமைதியானதையடுத்து தனுஷ்கோடிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு நேற்று சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரம்- மண்டபம் இடையே மீண்டும் சீரான ரயில் சேவை துவங்கியது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை, நேற்று ஓய்ந்தது. இதனால் மக்கள் தங்களது இயல்பான பணிகளில் ஈடுபட்டனர்.

* குடிசையில் 20 மணிநேரம் பரிதவித்த மூதாட்டி மீட்பு

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் கனமழை பெய்ததில் மீனவ கிராமங்களில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பாம்பன் சின்னப்பாலம் செல்லும் வழியில் உள்ள மொட்டையன் பனை குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் குடிசை வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் வசந்தா (75) என்ற மூதாட்டி சிக்கியுள்ளார். சுமார் 20 மணிநேரம் மழையில் சிக்கி வெளியேற முடியாமல் பரிதவித்த மூதாட்டியை மண்டபம் தீயணைப்புத்துறையினர் சென்று நேற்று பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Tags : Delta ,Chennai ,Titva cyclone ,
× RELATED இருதய இடையீட்டு...