மதுரை: திருப்பத்தூர் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து 60 பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி நேற்று பிற்பகல் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி அருகே கும்மங்குடி பகுதியில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே, திருப்பூரில் இருந்து காரைக்குடிக்கு 57 பயணிகளுடன் வந்த மற்றொரு அரசு பஸ் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கின. டிரைவர்கள், பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அலறினர்.
தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பஸ்களின் இடிபாடுகளில் சிக்கி இறந்த 8 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த 47 பேரை மீட்டு திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பின் மதுரை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பஸ்களின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததால் உடல்களை உடனடியாக மீட்பதில் சிரமம் நிலவியது. எனவே பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, ஒன்றாக இணைந்திருந்த பஸ்கள் பிரித்து எடுக்கப்பட்டன. பின்னர் சேதமடைந்த உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகங்கை கலெக்டர் பொற்கொடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இறந்தவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவனையில் குவிந்து வருவதால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. விபத்தில் காரைக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்த மல்லிகா (63), சிங்கம்புணரி அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்லம் (50), சிங்கம்புணரி கீழத்தெருவை சேர்ந்த முத்துமாரி (60), திருப்பூரில் இருந்து காரைக்குடி சென்ற பேருந்து டிரைவர் சென்றாயன் (36), அரியக்குடியைச் சேர்ந்த கல்பனா (36) உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பெண்கள், 2 ஆண்கள். விபத்து குறித்து நாச்சியார்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கு காரணம் என்ன?
கும்மங்குடி பகுதியில் சாலை மிகவும் குறுகலாக காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் என கூறப்படுகிறது. நேற்று நடந்த விபத்திற்கு சாலை போதிய அகலம் இல்லாததே காரணம் என சொல்லப்படுகிறது. எதிரே வந்த பஸ்சுக்கு வழி விட போதிய இடம் இல்லாததால் பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து நடந்துள்ளது. இரண்டு பஸ்களிலும் டிரைவர் சீட்டுக்கு பின்புறம் உள்ள சீட் பகுதிகள் பலத்த சேதடைந்தது. இந்த பகுதியில் அமர்ந்து இருந்தவர்கள்தான் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தென்காசியை தொடர்ந்து மீண்டும் மெகா சோகம்
தென்காசி அருகே இரு தனியார் பஸ்கள் கடந்த வாரம் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி விபத்து நடந்த ஒரு வாரத்தில் இரு அரசு பஸ்கள் மோதி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ்களை அதிவேகமாக இயக்குவதும், அதன் காரணமாக விபத்துகளும் பெரிய அளவிலான உயிரிழப்புகளும் நடப்பது தொடர்கதையாக உள்ளது. ஆகவே, அரசு மற்றும் தனியார் பஸ்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை கண்டிப்பாக பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், வாகன விதிமீறல்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இரங்கல்: தலா ரூ.3 லட்சம் உதவி
முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், காரைக்குடி – திருப்பத்தூர் சாலை, கும்மங்குடி கிராமத்தில் நேற்று பிற்பகல் 2 அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி 9 பெண்கள், 2 ஆண்கள் என 11 பேர் உயிரிழந்தனர், மேலும், 54 பேர் காயம் அடைந்த துயரமான செய்தியைக் கேட்டு கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
பைக் மீது மினி லாரி மோதி காங்கிரஸ் பெண் கவுன்சிலர், கணவர், தங்கை பரிதாப பலி
தென்காசி மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் அருள் செல்வ பிரபு (48). விவசாயி. இவரது மனைவி உஷா பேபி பிரபு (43), சுரண்டை நகராட்சி 7வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர். கவுன்சிலர் உஷா பேபி பிரபு சுரண்டை, சாம்பவர்வடகரையில் மெடிக்கல் நடத்தி வந்தார். இவரது தங்கை பிளசி (35). நேற்று காலை அருள் செல்வபிரபு, கவுன்சிலர் உஷா பேபி பிரபு, அவரது தங்கை பிளசி ஆகியோர் ஒரே பைக்கில் வேலப்பநாடாரூர் அருகே தங்களது தோட்டத்திற்கு சென்றுவிட்டு, சுரண்டைக்கு திரும்பி கொண்டிருந்தனர். இரட்டை குளம் விலக்கு அருகே காய்கறி லோடு ஏற்றி வந்த மினி லாரி பைக்கின் பின்னால் மோதியது. இதில் சாலையின் வலதுபுறம் கீழே விழுந்த மூவரும் லாரி சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிந்து மினி லாரி டிரைவர் குமாரை (39) கைது செய்தனர்.
