×

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் புதிய சிக்கல்; சோனியா, ராகுல் மீது புதிய வழக்கு பாய்ந்தது: டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ‘நேஷனல் ஹெரால்டு’ நாளிதழை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, வெறும் 90 கோடி ரூபாய் கடனுக்காக ‘யங் இந்தியன்’ நிறுவனம் மூலம் முறைகேடாகக் கைப்பற்றியதாகப் புகார் எழுந்தது.

யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 76 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத்துறையினர் நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு ஏற்பது குறித்த உத்தரவை டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் காக்னே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுப்பது குறித்த உத்தரவை வரும் டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். அன்றைய தினம் நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே வழக்கு விசாரணை அடுத்தக்கட்டத்தை எட்டும்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது புதிதாக ஒரு முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளனர். இவர்களுடன் வெளிநாட்டில் வசிக்கும் சாம் பிட்ரோடா, யங் இந்தியன் நிறுவனம் மற்றும் டோடெக்ஸ் மெர்க்கண்டைஸ் நிறுவனம் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சதி, சொத்துக்களை மோசடியாக அபகரித்தல், நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சித் தரப்பில் கூறும்போது, ‘எங்கள் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை;

இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் செய்யப்படும் நடவடிக்கை ஆகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தற்போது டெல்லி காவல்துறையும் புதிய வழக்கை பதிவு செய்திருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : National Herald ,Sonia ,Rahul ,Delhi Crime Police ,New Delhi ,Delhi Economic Crime Police ,Sonia Gandhi ,Rahul Gandhi ,Associated Journals ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில்...