×

தமிழகம் முழுவதும் இதுவரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு: இன்று ஒரேநாளில் 25 கோயில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, கொளத்தூர், அமுதாம்பிகை உடனுறை சோமநாத சுவாமி கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து சூளையில் ரூ.72 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வெங்கடாஜலபதி பரிபாலன சபாவினை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை தொன்மை வாய்ந்த கோயில்களில் பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்தி வருகின்றது.

அந்த வகையில் இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 25 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள அமுதாம்பிகை உடனுறை சோமநாதசுவாமி கோயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இக்கோயிலுக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், கோயில் நிதி ரூ.2.29 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.71 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் 13 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இக்குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.

அதே போல் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூளை, வெங்கடாஜலபதி பரிபாலன சபா முற்றிலும் சிதிலமடைந்திருந்த நிலையில் அதனை அகற்றி, ஆணையரின் பொது நலநிதி ரூ.72 லட்சம் செலவில் சுண்ணாம்பு காரை மற்றும் கடுக்காய் நீர் கலந்த காரைப் பூச்சு கட்டுமானத்துடன், மேல்தளமானது தேக்கு மர உத்திரங்களை கொண்டும் செங்கற்கள் குத்தப்பட்டும் மெட்ராஸ் டெரஸ் எனும் முறையில் தொன்மை மாறாமல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைத்தார். ஏராளமான இறை அன்பர்களும், பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், உதவி ஆணையர் பாரதிராஜா, மாநகராட்சி உறுப்பினர்கள் நாகராஜன், வேலு, சந்துரு, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Minister ,Sekarbabu ,CHENNAI ,MINISTER OF ,HINDU RELIGIOUS INSTITUTES ,SOMANATHA SWAMI TEMPLE ,KOLATUR, ,AMUTHAMBIGAI, CHENNAI ,Venkatajalapathi Parapathi Sabavina ,
× RELATED சி, டி பிரிவு பணியாளர்கள்,...