×

டித்வா புயலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29.11.2025 அன்று எழிலகத்தில் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், டித்வா புயலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கட்டுப்பாட்டு அறையில் அனைத்து துறை பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கெண்டு பணியாற்றி வருவதையும், எல்.ஈ.19 திரை மூலம் டித்வா புயலின் நகர்வுகள் கண்காணிக்கப்படுவதையும், மழை பெய்யும் பகுதிகள் குறித்து பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணத்தினால் நேற்றும் இன்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. நேற்றைய தினம் முதலமைச்சர் இங்கு வந்து ஆய்வு செய்தார்.

இன்று முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நானும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்களும், அரசு செயலாளர் அவர்களும் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம்.

கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள கால் சென்டருக்கு வருகின்ற அழைப்புகள், அழைப்புகளின் பேரில்
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சமூக வலைதளங்களில் மழை தொடர்பாக தெரிவிக்கப்படுகின்ற புகார்கள். கோரிக்கைகள் குறித்தும் இங்கு ஆய்வு செய்துள்ளோம். வந்திருக்கின்ற அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்களிடம் தெரிவித்து உள்ளோம்.

டித்வா புயல் இப்போது சென்னைக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் வழியாக நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நமக்கு தெரிவித்திருக்கின்றது. அதனால் இன்றைக்கு 29 ந்தேதி இரவு மற்றும் நாளை விடியல் காலை முதல் மதியம் வரை இந்த இரண்டு தினங்களிலும் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. துவரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் நேற்று 23.0 செ.மீ. இன்று 7.0 செ.மீட்டர் என்று இரண்டு நாட்களிலும் சேர்த்து 30 செ.மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் நீர்த்தேக்கங்களில் தற்போது 85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இதனால் பயப்படும்படியான சூழல் ஏதுமில்லை. கனமழை காரணமாக மீட்பு மற்றும் நிவாரண பணி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில பேரிடர் மீட்பு படையின் 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்களும் கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்காக கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் இன்றும், நாளையும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருக்கின்றது.

மீட்பு பணிகளுக்காக 1,185 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என்று நம்முடைய அரசு முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போது வரை பெய்த கனமழையால் சுமார் 20,000 ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றது. வெள்ளம் வடிந்ததும் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும்.

கனமழை காரணமாக அதிக மழை எதிர்கொண்ட மாவட்டங்களில் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தற்போது வரை மொத்தம் 1,836 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக 5 கிலோ அரிசி பாக்கெட்டுகள் 5 லட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறையினரும் முறையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் நாளை 30.11.2025 தமிழ்நாட்டின் வடமாவடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொள்கின்றது.

கனமழை சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். அரசு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தயவு செய்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். எனவே இந்த பேரிடர் நேரத்தில் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்படுவோம். இந்த சூழலையும் கடந்து வருவோம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மிகப்பெரிய எல்.ஈ.டி கண்காணிப்பு திரைகளில் வெவ்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுகின்றதா என்று சுரங்கப்பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை தானே கேட்டறிந்தார். சமூக வளைதளங்களில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து கணினியில் பார்வையிட்டு, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், வருவாய் நிருவாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் எம்.சாய்குமார்.சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்,பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், ற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy ,Chief Minister ,Ditwa ,Chennai ,Tamil Nadu ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,State ,Emergency ,Operations Centre ,Eilaka ,Storm Ditwa ,
× RELATED மது போதையை விட ஆபத்தான மதவாத அரசியல்...