×

பாறைகள் சரியும் வாய்ப்புள்ளதாக வல்லுநர் குழு எச்சரிக்கை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபமும் ஏற்றப்படும்.

கடந்த ஆண்டு பெஞ்சால் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்தது. அதனால், அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி இறந்தனர். எனவே, புவியியல் வல்லுனர்களின் பரிந்துரைப்படி, கடந்த ஆண்டு தீபத் திருவிழாவின்போது மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மகா தீப திருவிழாவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், டிட்வா புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய புவியியல் ஆய்வு மைய வல்லுநர் குழு சமீபத்தில் அளித்துள்ள அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை இல்லாத நிலையில் இருக்கிறது. ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் கற்பாறைகள் தளர்ந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே, புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேறுவதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Tiruvannamalai Deepat Festival ,Tiruvannamalai ,Karthigai Deepat festival ,Parani Deepam ,
× RELATED தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே...