திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு காரில் செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில்குமார் என்பவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகையை பலாத்காரம் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள நடிகர் திலீப் என தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 8 வருடங்களாக எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான மணிகண்டன் என்பவர் நேற்று காலை தன்னுடைய கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் இரவு இவரை குடிபோதையில் ரகளை செய்ததாக கூறி கொச்சி போலீசார் பிடித்து விசாரித்து பின்னர் விடுவித்தனர். இதன்பின் நேற்று காலை இவர் வீட்டில் வைத்து கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
