×

டிட்வா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு; 130 பேர் மாயம்

கொழும்பு: டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புயலால் பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. 130 பேர் மாயமாகி உள்ளனர். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் கடந்த 3 நாட்கள் இலங்கையை புரட்டிப் போட்டது. நுவரெலியா உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கண்டி மாவட்டத்தில் 50 பேரும், பதுல்லாவில் 35 பேரும் பலியாகினர். நாடு முழுவதும் 61 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை 9 மணி நிலவரப்படி, டிட்வா புயலால் பலியானோர் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும், 130 பேர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என பேரிடர் மேலாண்மை மையம் கவலை தெரிவித்தது. இலங்கையில் 35 சதவீத பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. இந்நிலையில், டிட்வா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையிலிருந்து நேற்று முழுமையாக வெளியேறியது.

இதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு நிவாரண பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் உடனடியாக அவசரநிலை பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயக நேற்று அறிவித்தார்.

நெருக்கடி நிலையைச் சமாளிக்க ராணுவ துருப்புக்கள், காவல்துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படையை நிவாரண பணிகளுக்கு விரைவாக அனுப்புவது அவசரநிலை மூலம் எளிதாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இருந்து முற்றிலும் விலகிய டிட்வா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி நோக்கி நகர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* 21 டன் நிவாரண பொருட்களை வழங்கியது இந்தியா
அண்டை நாடான இலங்கை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டி உள்ளது. ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகளின் படி, ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி-130 மற்றும் ஐஎல்-76 விமானங்கள் மூலம் 21 டன் நிவாரண பொருட்களும், 80 பேரிடர் மீட்பு படை வீரர்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற சி-130 விமானம் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் கொழும்பு சென்டறடைந்தது.

Tags : Cyclone Titva ,Lanka ,Colombo ,Sri Lanka ,Cyclone ,Titva ,southwestern Bay of Bengal ,
× RELATED நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன்...