×

டிட்வா புயலால் தமிழகம் முழுவதும் கனமழை டெல்டாவில் 1.35லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின: ராமேஸ்வரத்தில் வீடுகளை சூழ்ந்தது வெள்ளம்

* மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, பாம்பன் பாலத்தில் ரயில்கள் இயக்க தடை, 29 விமானங்கள் ரத்து

சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. கடல் சீற்றம் காரணமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம் பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. நாகூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  விமானங்கள் ரத்து: டிட்வா புயல் காரணமாக மொத்தமாக திருச்சியில் இருந்து புறப்படும் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மதுரை விமான நிலையத்திலும் உள்நாட்டு சேவை 16ல் 12 சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று வானிலையை பொறுத்து விமானம் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல தூத்துக்குடி- சென்னை, தூத்துக்குடி- பெங்களூருவுக்கு 7 விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. ராமேஸ்வரம்: டிட்வா புயல் எதிரொலியாக ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று 55 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் குறையாததால் 2வது நாளாக பாலத்தில் ரயிலை இயக்க தடை விதிக்கப்பட்டது.

மாலையில் காற்றின் வேகம் குறைந்ததால் மண்டபத்திலிருந்து அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளின்றி ராமேஸ்வரம் வந்தது. அந்த ரயில் போட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் பாம்பன் பாலம் வழியாக சென்னை சென்றது. மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் சூறைக்காற்றுடன் கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்ததால் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 2வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் 7 செ.மீ. மழை பதிவானது. சேராங்கோட்டை கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு கரையோர மணல் மேடுகள் கரைந்து வருவதால் அப்பகுதி மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ராமேஸ்வரத்தில் தொடர் மழையால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அறைகளில் முடங்கினர்.

ராமேஸ்வரம் ரயில்வே வடக்கு, விசுவாச நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலத்த காற்றின் காரணமாக தீவு பகுதியில் ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் விரைந்து அகற்றினர்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது. புதுச்சேரியில் 2வது நாளாக நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று காலை வரை தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது.

நெல்லை மாநகரில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வௌ்ளம் கரைபுரண்டு ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 7 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

* கொடைக்கானல் முடங்கியது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களும், பேரிஜம் ஏரி வனப்பகுதியும் மூடப்பட்டுள்ளது. இதையறியாது நேற்று வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் நகரில் காற்றுடன் மழை பெய்து வருவதாலும், கடுங்குளிர் நிலவி வருவதாலும் பொதுமக்கள் வீடுகளிலும், சுற்றுலாப்பயணிகள் விடுதிகளிலும் முடங்கியுள்ளனர்.

* ரயில் வேகன்களில் பாதுகாப்பாக இருக்கும் 700 டன் உரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ‌சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடிக்காக, தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 700 டன் காம்ப்ளக்ஸ் உரம் தஞ்சாவூருக்கு நேற்றுமுன்தினம் வந்தது. பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தனியார் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை இடைவிடாது பெய்து வருவதால் உரம் மூட்டைகள் ரயில் வேகன்களிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

* சாலையோர கால்வாயில் சிக்கிய சுற்றுலா வேன்
ஆந்திர மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வேனில் சுற்றுலாப்பயணிகள் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தனர். மண்டபம் அருகே வேதாளை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, கனமழை பெய்ததால் மழை நீரில் வேன் சிக்கி நிலை தடுமாறி, சாலையோர கால்வாயில் சிக்கி பாதி வரை தண்ணீரில் மூழ்கியதால் சுற்றுலாப்பயணிகள் பதற்றம் அடைந்து கத்தினர்.

சத்தம்கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வந்து வேனில் இருந்த சுற்றுலாப்பயணிகளை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் இரவோடு இரவாக வேனை மீட்டு அந்த பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

* திருச்செந்தூரில் கடல் 90 அடி உள்வாங்கியது
டிட்வா புயல் எதிரொலியாக திருச்செந்தூர் கோயில் பகுதியில் அய்யா கோயில் அருகே நேற்று மாலை கடல் சுமார் 90 அடி உள்வாங்கி காணப்பட்டது. மேலும் பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் பாசிகளும் கரை ஒதுங்கியது. நேற்று மாலை 6 மணியளவில் வானில் வர்ணமாக வானவில் தோன்றியது. இதனை பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.

Tags : Tamil Nadu ,Cyclone Titva ,Rameswaram ,Pamban Bridge ,Chennai ,Delta ,Nagapattinam ,Mayiladuthurai ,Thanjavur ,Thiruvarur… ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...