×

எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: மேற்கு வங்க டிஜிபிக்கு உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியில் ஈடுபடும் வாக்காளர் நிலை அதிகாரிகளுக்கு (பிஎல்ஓ) கடும் பணிச்சுமை ஏற்படுவதாகவும், பணிச்சுமையால் இதுவரை 40 பிஎல்ஓக்கள் இறந்திருப்பதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் சுஜீத் குமார் மிஸ்ரா மேற்கு வங்க மாநில போலீஸ் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில், ‘‘பிஎல்ஓக்கள் மற்றும் பிற தேர்தல் களப்பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது பல்வேறு தரப்பினரிடமிருந்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

எனவே எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பிஎல்ஓ உள்ளிட்ட களப்பணியாளர்கள் பயம், அச்சுறுத்தல் இன்றி பணியாற்றக் கூடிய சூழலை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்தா குப்தாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுதவிர 12 ஐஏஎஸ் அதிகாரிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Tags : West Bengal ,DGP ,Kolkata ,Election Commission ,Polling Station Officers ,PLOs ,
× RELATED நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு;...