மதுரை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது பாராட்டத்தக்கது என ஐகோர்ட் கிளை பாராட்டியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த 3 டாக்டர்கள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பாலியல் தொந்தரவு செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் அரசு நிறுவனங்கள்,
தனியார் நிறுவனங்கள் என அனைத்து தரப்பு பெண்களும் பணிபுரியக் கூடிய இடங்களில் தொடர் கண்காணிப்புகள், பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு அரசு அதனை தொடர்ந்து கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கைகள் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக மனநிலையில் இருந்து தோன்றும் என்பதால் சட்ட நடவடிக்கை மட்டும் அல்லாமல் மனநல ஆலோசனைகள் தொடர்பான திட்டங்களும் அவசியம். பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் தொடர்பான அரசு இணையதளத்தை உருவாக்க வேண்டும்.
அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு தனது வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்து மற்ற மாநிலங்களுக்கான ஒரு முன் மாதிரியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. எல்லா சூரிய உதயமும் நம்பிக்கை அற்றவை அல்ல, அது நிச்சயம் அடுத்த நாளை உதயம் ஆக்கும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
