- சென்னை-கோவை
- சேலம்
- சுலைமான் கான்
- லிங்கராஜபுரம், பெங்களூரு, கர்நாடகா
- ராஜியபானு
- சாமல்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்
- திருப்பூர்…
சேலம்:கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கராஜபுரத்தில் வசிப்பவர் சுலைமான் கான் (30). இவரது மனைவி ரஜியாபானு (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் செல்வதற்காக நேற்று முன்தினம் சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு தம்பதியர் வந்தனர்.
அப்போது, சென்னை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பின்பக்க முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் ஏறி பயணம் செய்தனர். ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரஜியாபானுக்கு பிரசவவலி ஏற்பட்டது. வலியால் அவர் துடித்த நிலையில், பெட்டியில் இருந்த பெண்கள் அவரை சூழ்ந்து நின்று பிரசவம் பார்த்தனர். அப்போது ரஜியாபானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுபற்றி பயணிகள் 139 என்ற ஆர்பிஎப் போலீசாரின் அவசர உதவி எண்ணிற்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎப் மற்றும் ரயில்வே போலீசார் 108 ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருந்தனர். ரயில் பொம்மிடியில் வந்து நின்றதும், குழந்தையுடன் ரஜியாபானுவை பாதுகாப்பாக ரயிலில் இருந்து இறக்கி, ஆம்புலன்சில் ஏற்றினர். பிறகு அருகில் உள்ள பைரநத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
