×

இளம்பெண் பலாத்கார புகார் கேரள காங். எம்எல்ஏ மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு: கைது செய்யப்படுவாரா? முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு

திருவனந்தபுரம்: பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கேரள முதல்வரிடம் பலாத்கார புகார் கொடுத்ததை தொடர்ந்து அவர் மீது திருவனந்தபுரம் வலியமலை போலீஸ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இவர் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ஒரு இளம்பெண்ணுடன் நடத்திய சாட்டிங் மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தான் கர்ப்பிணியாக இருப்பதாக அந்த இளம்பெண் கூறுவதும், கர்ப்பத்தை கலைக்குமாறு ராகுல் மாங்கூட்டத்தில் மிரட்டல் தொணியில் பேசுவதும் அந்த ஆடியோவில் இருந்தது. இந்த ஆடியோ விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ராகுல் மாங்கூட்டத்தில் தன்னுடைய இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இதற்கிடையே போராட்டம் வலுத்ததால் ஒரு சில மாதங்கள் இவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ராகுல் மாங்கூட்டத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் நேற்று முன்தினம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், ராகுல் மாங்கூட்டத்தில் தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கியதாகவும், கர்ப்பத்தை கலைக்குமாறு கூறி மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது தொடர்பான வாட்ஸ்ஆப் சாட்டிங், ஆடியோ உள்பட டிஜிட்டல் ஆதாரங்களையும் அவர் அளித்தார். இந்தப் புகாரை பினராயி விஜயன் குற்றப்பிரிவு ஏடிஜிபிக்கு அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து புகார் கொடுத்த இளம்பெண்ணிடம் திருவனந்தபுரம் எஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றனர். பின்னர் ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏ மீது பலாத்காரம், கட்டாயப்படுத்தி கருச்சிதைவு செய்ய வைத்தது ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் திருவனந்தபுரம் வலியமலை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராகுல் மாங்கூட்டத்திலை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சதித்திட்டம் தீட்டி இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே பலாத்கார புகார் வெளியானவுடன் ராகுல் மாங்கூட்டத்தில் தலைமறைவானார். இந்நிலையில் இவர் முன்ஜாமீன் கோரி திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

Tags : Kerala Congress MLA ,Thiruvananthapuram ,Palakkad ,Congress MLA ,Rahul Manguttathil ,Thiruvananthapuram Valiyamalai Police.… ,
× RELATED அன்புமணி கூறியது பொய்யா? பாமக தலைவர்...