சென்னை: தமாகா 12ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழருவி மணியனின் காமராஜர் கட்சி, வரும் 20ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் விழாவின் போது தமாகாவுடன் இணைய உள்ளது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது விருப்பத்திற்கு ஏற்ப புதிய இயக்கத்தில் இணைந்திருக்கிறார். இதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தமிழக மக்களின் எண்ணங்களை ஏற்கனவே பிரதிபலித்தவர்கள்.
வரும் சட்டமன்ற தேர்தலில், 3வது கூட்டணி வருமா என்றால், தமாகா பொறுத்தவரை நாங்கள் இருக்கும் 2வது கூட்டணி வெற்றி கூட்டணி என்று நம்புகிறோம். சளைக்காமல் மக்கள் பணி செய்யும் தமாகாவின் குரல் பேரவையில் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் பால சந்தானம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கே.ஆர்.டி.ரமேஷ், மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், கே.பி.லூயிஸ், தி.நகர் கோதண்டன், ஆர்.எஸ்.முத்து, சந்திரசேகரன், டைல்ஸ் முருகன், வேதா, வெங்கடேசன், இருதயராஜ், மகளிர் அணி கல்யாணி, நந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
