மூணாறு: மூணாறு அருகே, புலி தாக்கி 4 பசுக்களை கொன்றதால் பொதுமக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே பாம்பன்மலை எஸ்டேட், காப்பி ஸ்டோர், மறையூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்களும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். மாற்று வருவாய்க்காக கறவை பசுக்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் பாம்பன் மலை எஸ்டேட் பகுதியில் 4 கறவைப் பசுக்களை புலி தாக்கி கொன்றுள்ளது. நேற்று முன்தினம் விநாயகர் என்பவருக்கு சொந்தமான 3 பசுக்களையும், நேற்று அருணாசலம் பிரேமி என்பவரின் ஒரு பசுவையும் புலி தாக்கி கொன்றுள்ளது.
இதில், ஒரு பசுவை பகலில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, தேயிலை தோட்டத்தில் இருந்து பாய்ந்து வந்த புலி, அவர்கள் கண்முன்னே தாக்கி கொன்றது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 7 பசுக்களை புலி கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். பாம்பன் மலை எஸ்டேட்டில் புலி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கும் மற்றும் அரசுக்கும் பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை; கொல்லப்பட்ட பசுக்களுக்கும் நிவாரணம் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். எனவே, தேயிலை தோட்டங்களில் திரியும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
