லாஸ் ஏஞ்சல்ஸ்: சமூக வலைத்தள நேரலையில் துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டிய புகாரில் அமெரிக்கப் பாடகர் ரே ஜே அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ரியாலிட்டி ஷோ நட்சத்திரமும் பாடகருமான ரே ஜே மற்றும் அவரது மனைவி பிரின்சஸ் லவ் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்தச் சூழலில் நன்றி தெரிவிக்கும் நாளான நேற்று அதிகாலை ரே ஜே தனது சமூக வலைத்தளத்தில் நேரலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது குழந்தைகளைத் தன்னிடம் இருந்து பிரிக்கச் சிலர் முயற்சிப்பதாகக் கூறிய அவர், திடீரென துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி, ‘எனது அறைக்குள் யாராவது வந்தால் அவர்களைச் சுட்டுத் தள்ளுவேன்’ என்று ஆவேசமாகப் பேசினார்.
அந்தச் சமயத்தில் குழந்தையுடன் அறைக்குள் வந்த அவரது மனைவி, ரே ஜே தன் மீது துப்பாக்கியை நீட்டி மிரட்டுவதாகக் கூச்சலிட்டார். ஆனால் ரே ஜே இதனை மறுத்ததுடன், தனது மனைவியை குடிகாரர் என்றும் திட்டினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் வீட்டைச் சூழ்ந்து கொண்டு ரே ஜேவைக் கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் ஆயுதத்தை அச்சுறுத்தும் வகையில் கையாளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
