கும்பகோணம்: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனத்துக்கான தேர்வு நடந்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் மேலிட பொறுப்பாளர்கள் மாவட்டங்கள் வாரியாக விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றனர். அதன்படி நேற்று தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியில் விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடும் 28 பேரிடம் விருப்ப மனுக்களை வாங்கி, தனித்தனியாக நேர்காணல் செய்தார்.
அப்போது நாச்சியார் கோவில் பகுதியை சேர்ந்த குமரன், மாவட்ட தலைவர் பதவிக்கான விருப்ப மனுவை நரேஷ்குமாரிடம் கொடுத்தார்.
அப்போது குமரனின் ஆதரவாளர்கள் திடீரென குமரனை பார்த்து மாவட்ட தலைவர் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் வெங்கடேஷ் ஆதரவாளர்கள் விருப்பமனு நேர்காணலின் போது எப்படி மாவட்ட தலைவர் வாழ்க என்று கூறலாம் என்று கேட்டனர். இதனால் குமரன் தரப்பினருக்கும், வெங்கடேஷ் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி எறிந்தனர். உடனே மேடையில் இருந்த கட்சி மேலிட பொறுப்பாளர் நரேஷ்குமார் இருதரப்பையும் கூட்டரங்கை விட்டு வெளியேற்றினார். இரு தரப்பினர் மேலிட பொறுப்பாளர் முன்பே மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
