- தஞ்சாவூர்
- காவ்யா
- ஜனாதிபதி
- புண்ணியமூர்த்தி
- மேலக்களக்குடி
- பாபநாசம் தாலுகா
- தஞ்சாவூர் மாவட்டம்
- ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி...
தஞ்சை: தஞ்சை அருகே அரசு பள்ளி ஆசிரியையை குத்திக்கொலை செய்த காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலகளக்குடியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் புண்ணியமூர்த்தி மகள் காவ்யா(26). ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார்(29). பெயின்டரான இவரும், காவ்யாவும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். அஜித்குமாரை காவ்யா காதலித்து வந்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் காவ்யாவுக்கும், அவரது மாமா பையனுக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்து கடந்த 23ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதை அஜித்குமாரிடம் தெரிவிக்காமல், அவருடன் தொடர்ந்து செல்போனில் காவ்யா பேசி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு இருவரும் செல்போனில் வீடியோகாலில் பேசி கொண்டிருந்தபோது தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலை அஜித்குமாரிடம் கூறியதுடன், அது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோவை அஜித்குமாருக்கு காவ்யா அனுப்பியுள்ளார். இதனால் அஜித்குமார் கோபத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்ற காவ்யாவை கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே வழிமறித்து நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி ஏன் கூறவில்லை. என்னை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டுமென அஜித்குமார் கூறி உள்ளார். இதற்கு காவ்யா மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதையடுத்து அம்மாப்பேட்டை போலீசில் அஜித்குமார் சரணடைந்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அஜித்குமார் அளித்த வாக்குமூலத்தில், காவ்யாவும், நானும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களது காதல் காவ்யாவின் தந்தைக்கு பிடிக்கவில்லை. சமீபத்தில் கோவைக்கு பெயின்டர் வேலைக்கு சென்று விட்டேன். இந்த நேரத்தை பார்த்து யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே வைத்து காவ்யாவுக்கு அவரது உறவுக்கார பையனுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதை காவ்யா என்னிடம் சொல்லவில்லை. நேற்று முன்தினம் செல்போனில் பேசியபோது நடந்த சம்பவத்தை கூறினார். அதற்கு நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினேன். இதற்கு காவ்யா மறுப்பு தெரிவித்தார். அவரது பெற்றோரிடம் நான் பேசுகிறேன் என்று சொன்னேன். அதற்கும் வேண்டாம் என்று கூறி விட்டார்.
இதையடுத்து பள்ளிக்கு சென்ற காவ்யாவிடம் இத்தனை ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். என்னை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றேன். அவர் முடியாது என்று பிடிவாதமாக கூறி விட்டார். இதனால் ஆத்திரமடைந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து தஞ்சை கோர்ட்டில் அஜித்குமாரை ஆஜர்படுத்தி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.
